அமெரிக்க சதுரங்க‌ அணிக்கு சென்னை அமெரிக்க துணைத் தூதர் ஜூடித் ரேவின் வரவேற்பு

சென்னை, ஜூலை 28: மாமல்லபுரத்திற்கு வந்த அமெரிக்க சதுரங்க‌ அணியை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் ஜூடித் ரேவின் வரவேற்றார். கல்வி மற்றும் விளையாட்டு மூலமான நல்லுறவை வளர்ப்பதில் தீவிர ஆர்வம் கொண்ட அவர், ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9 வரை இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற அமெரிக்க செஸ் வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், சென்னை செஸ் ஒலிம்பியாட் எப்படி சதுரங்க‌ விளையாட்டை பிரபலப்படுத்த உதவுகிறது என்றும் உலகெங்கிலும் உள்ள சதுரங்கப் பிரியர்களை இந்த உலகளாவிய போட்டி எவ்வாறு ஒன்றிணைக்கிறது என்பதையும் பற்றி துணைத்தூதர் ரேவின் வீரர்களுடன் உரையாடினார்.

அமெரிக்க செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் (ஜிஎம்), சர்வதேச மாஸ்டர்ஸ் (ஐஎம்) மற்றும் பெண் கிராண்ட்மாஸ்டர்கள் (டபிள்யூஜிஎம்) குழுவினரிடம் பேசிய துணைத்தூதர், “சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அமெரிக்கா சார்பில் நீங்கள் அனைவரும் பங்கேற்பது குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அமெரிக்காவிற்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆழமான உறவுகள் உங்களைப் போன்ற விளையாட்டு வீரர்களால் உருவாக்கப்பட்ட மக்களுக்கு இடையிலான இணைப்புகளால் வலுவடைந்துள்ளன‌. மேலும், அமெரிக்க-இந்திய நட்புறவின் 75வது ஆண்டில் குறிப்பாக சென்னையில், செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதைக் கண்டு சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் பெரும் மகிழ்ச்சியடைகிறது” என்று குறிப்பிட்டார்.

ஓப்பன் பிரிவு அமெரிக்க அணியின் கேப்டன் ஜான் டொனால்ட்சன் கூறுகையில், “சென்னையில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதில் அமெரிக்க அணிகள் பெருமையடைகின்றன. இந்தியாவை சதுரங்கத்தின் பிறப்பிடமாக பலரும் கருதுகிறார்கள், எனவே இந்த மதிப்புமிக்க நிகழ்வு முதல் முறையாக இங்கே நடைபெறுவது மிகவும் பொருத்தமானது. மத்திய‌ மற்றும் மாநில‌ அரசுகளின் ஆதரவுடன், இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை திறம்படச் செய்திருக்கும் இந்திய செஸ் சம்மேளனத்திற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இந்த ஆண்டு சென்னையில் ஒரு அற்புதமான போட்டியை நாங்கள் எதிர்நோக்குகிறோம்!” என்றார்.

அமெரிக்க மகளிர் சதுரங்க‌ அணி கேப்டன் மெலிக்செட் காச்சியன், ஒலிம்பியாட் போட்டியை முதன்முறையாக நடத்தியதற்காக இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “இந்தியா ஆழமான மற்றும் வலுவான சதுரங்க பாரம்பரியம் கொண்ட நாடு. இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் ஐந்து முறை உலக சாம்பியன் ஆனவர். சென்னைக்கு நீண்டதொரு சதுரங்க வரலாறு உண்டு. கடந்த 2013-ம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்த்- மேக்னஸ் கார்ல்சன் இடையேயான உலக சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில்தான் நடந்தது. இந்தியா தற்போது உலக சதுரங்கத்தில் முன்னணியில் உள்ளது. சிறந்த சதுரங்க நிகழ்வுகள் பல இங்கே நடக்கின்றன. எங்கள் அமெரிக்க அணி இந்த உலக செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறது. சிறந்த பங்களிப்பை வழங்க‌ நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்றார்.

சர்வதேச மாஸ்டர் (ஐஎம்) ஜான் டொனால்ட்சன் தலைமையிலான அமெரிக்க அணி, ஓப்பன் பிரிவில் 187 அணிகளில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் கிராண்ட்மாஸ்டர் (ஜிஎம்) ஃபேபியானோ கருவானா, ஜிஎம் லெவோன் அரோனியன், ஜிஎம் வெஸ்லி சோ, ஜிஎம் லீனியர் டொமிங்கஸ் மற்றும் ஜிஎம் சாம் ஷாங்லேண்ட் ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். ஜிஎம் ராபர்ட் ஹெஸ் இதன் பயிற்சியாளர் ஆவார்.

ஜிஎம் அலெஜாண்ட்ரோ ராமிரெஸை பயிற்சியாளராகக் கொண்ட கேப்டன் ஜி.எம்.மெலிக்செட் காச்சியன் தலைமையிலான அமெரிக்க மகளிர் அணி மொத்தமுள்ள 162 அணிகளில் எட்டாவது இடத்தில் உள்ளது. ஜி.எம். இரினா க்ருஷ், ஐ.எம் கரிசா இப், ஐ.எம் அன்னா ஜடோன்ஸ்கி, பெண்கள் கிராண்ட்மாஸ்டர் (டபிள்யூஜிஎம்) டடேவ் ஆபிரகாம்யன் மற்றும் டபிள்யூஜிஎம் குல்ருக்பெகிம் டோகிர்ஜோனோவா ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

புகைப்பட விளக்கம்: மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முன்னதாக அமெரிக்க செஸ் அணி வீரர்களுக்கு சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்தூதர் ஜூடித் ரேவின் வாழ்த்து தெரிவித்தார். படத்தில் துணைத்தூதர் ஜூடித் ரேவின், (இடமிருந்து வலம்) ஜிஎம் அலெஜாண்ட்ரோ ராமிரெஸ், டபிள்யூஜிஎம் குல்ரூக்பெகிம் டோகிர்ஜோவா, டபிள்யூஜிஎம் டாடெவ் ஆபிரகாம்யன், ஜிஎம் மெலிக்செட் காச்சியன், ஐஎம் அன்னா ஜடோன்ஸ்கி, ஜிஎம் இரினா க்ரூஷ், ஜிஎம் லெவோன் அரோனியன், ஜிஎம் லீனியர் டொமிங்குஸ், ஜிஎம் ஃபேபியானோ கருவானா, ஜிஎம் ராபர்ட் ஹெஸ், ஜிஎம் வெஸ்லி சோ, ஜிஎம் சாம் ஷாங்க்லேண்ட், ஐஎம் ஜான் டொனால்ட்சன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top